நிஜாமுதீன்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!!
நிஜாமுதீனிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சுவர்ண் ஜெயந்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வடமாநிலங்களில் இருந்து காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்கிறது. நிஜாமுதீனிலிருந்து நேற்று புறப்பட்டு வந்தது. ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ரெயில் தெலுங்கான மாநிலம் குன்றத்திமடுகு அருகே வந்தபோது, பி-2 ஏசி பெட்டியில் திடீரென புகை வந்தது. இதனை கண்ட பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். ராம்புரம் கிராமம் அருகே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் அதில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கீழே இறங்கி அலறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் போலீசார் புகை வந்த ரெயில் பெட்டியை சோதனை செய்தனர். அப்போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தீயை அணைத்து தற்கலிகமாக சரி செய்யப்பட்டது. பின்னர் ராம்புரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோர்னக்கல் ரெயில் நிலையத்தில் 40 நிமிடம் ரெயில் நிறுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை ரெயிலிலிருந்து கழட்டிய பின், ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் பெட்டியில் புகை வந்தவுடன் பயணி அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.