;
Athirady Tamil News

சாலை வசதி இல்லாததால் குழந்தை பிணத்தை 10 கிலோ மீட்டர் சுமந்து சென்ற பெற்றோர்!!

0

அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பிரியா. இவர்களது 1½ வயது மகள் தனுஷ்கா. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்தது. இதனால் குழந்தை அலறி துடித்துள்ளது. சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்போது குழந்தையை பாம்பு கடித்தது தெரிந்தது. உடனடியாக அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சாலை வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாமதமானது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தை உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை உடலை வீட்டிற்கு ஆம்புலன்சு மூலம் அத்தி மரத்து கொல்லை கிராமத்திற்கு கொண்டு சென்றனர். கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்து இறக்கிவிட்டனர். பின்னர் இறந்த குழந்தை பிணத்தை 10 கிலோ மீட்டர் தூரம் கையில் சுமந்து சென்றனர்.

அல்லேரி மலைப் பகுதியில் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து சாலை வசதி கேட்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது. பாம்பு கடித்த உடன் குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் சாலை வசதி இல்லலாததால் உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.