மயிலாப்பூரில் வீட்டு பால்கனி இடிந்து 6 பேர் சிக்கி தவிப்பு- தீயணைப்பு படையினர் மீட்டனர் !!
மயிலாப்பூர் சிட்டி செண்டர் அருகே ராம்குமார் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமையான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 8 வீடுகளும், மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன. இந்நிலையில், இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ள பால்கனி நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், அந்தக் குடியிருப்பில் வசிக்கும் திருநாவுக்கரசு (வயது 30) என்பவர் மேல் இடிந்து விழுந்தது. அவர் பால்கனியோடு முதல் தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாப்பூர் தீயணைப்புத் துறையினர் காயமடைந்த திருநாவுக்கரசு என்பவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பால்கனி இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த செல்வம் (வயது 55), ஆண்டாள் (வயது 78), ராஜேஸ்வரி (வயது 48), அட்சயா (வயது 26), 3 வயது ஆண் குழந்தை ஆகியோரை தீயணைப்பு துறையினர் ஏணியின் உதவியுடன் மீட்டனர். விபத்துக்கு உள்ளான குடியிருப்பின் ஒரு சில பகுதிகள் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும் படியும், குடியிருப்பு கட்டிடத்தின் சுவர் பகுதிகள் விழுந்தும் ஆபத்தான சூழலில் காணப்படுகிறது.