சேலத்தில் மின்னல் தாக்கி காட்டன் மில்லில் தீ விபத்து!!
சேலம் எருமாபாளையம் ராமானுஜர் கோவில் செல்லும் வழியில் ஜெயகோபால் என்பவருக்கு சொந்தமான காட்டன்மில் உள்ளது. இந்த மில்லில் பஞ்சு மற்றும் நூல் குவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு சேலத்தில் தொடர் மழை பெய்தபோது மின்னல் மற்றும் பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது. அப்போது காட்டன் மில் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. அவுட்டர் மிஷின் மீது மின்னல் தாக்கியதில், அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, மில்லில் உள்பகுதியில் இருந்த பால்சீலிங் தீப்பி டித்தது. இந்த தீ குபு, குபுவென எரிய தொடங்கியது. இதனால் ஆலை முழுவதும் கரும்புகை மூட்டம் நிலவியது. இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.
ஆனால் முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் உடனடியாக செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உதவி மாவட்ட அதிகாரி சிவகுமார், தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்ட காரணத்தினால், தீ ஆலையில் உள்ள பஞ்சு மற்றும் நூல்களில் பரவாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.