மக்கள்தொகையில் சீனாவை முந்திய இந்தியா வல்லரசாகவும் விஞ்ச முடியுமா? !!
ஐ.நா-வின் கூற்றுப்படி உலக மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இப்போதுதான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவால் உலகளாவிய வல்லரசாக உள்ள, அதன் வலிமைமிக்க அண்டை நாட்டுக்கு சமமாக முடியுமா – அல்லது விஞ்ச முடியுமா?
பொருளாதாரம், புவிசார் அரசியல் செல்வாக்கு மற்றும் இராணுவ வலிமை ஆகியவற்றில் சீனா இன்னமும் முன்னணியில் தான் உள்ளது. ஆனால், அந்தக் காட்சி மாறுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2001ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற மைக்கேல் ஸ்பென்ஸை பொறுத்தவரை, இந்தியாவின் தருணம் வந்துவிட்டது.
“இந்தியா சீனாவை பிடிக்கும்,” என்று ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக டீனும் பேராசிரியருமான அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
“சீனாவின் பொருளாதாரம் குறையும், ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் குறையாது.” என்கிறார்.
ஆனால் அதில் சில சவால்கள் உள்ளன.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. இது, ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியாவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு பெரியது
ஒப்பீட்டளவில் சிறிய நடுத்தர நாடாக இருக்கும் இந்தியா, “சீன பாணி” ஏற்றம் காண, கல்வி, வாழ்க்கைத் தரம், பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் அதிக முதலீடு தேவைப்படும்.
மேலும் உலகளாவிய வல்லரசாக இருப்பது மக்கள் தொகை மற்றும் பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டது. இது புவிசார் அரசியல் மற்றும் ராணுவ சக்தியை சார்ந்துள்ளது. இவற்றில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.
மென்மையான சக்தியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் பாலிவுட் திரைப்படத் துறையானது நாட்டை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்துவதில் மிகவும் திறம்பட செயல்பட்டு வருகிறது. Netflix-ல் சாதனைகளை முறியடிக்கிறது.
ஆனால் ‘சீனாவுட்’ என்று அழைக்கப்படும், சீனாவின் சொந்த வேகமாக வளர்ந்து வரும் திரைப்படத் துறை, 2020ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் கொடுத்து ஹாலிவுட்டை முதன்முறையாக வீழ்த்தியது. 2021-ல் மீண்டும் அதைச் செய்தது.
இன்று, இந்தியாவில் ஒரு நாளைக்கு 86,000 குழந்தைகள் பிறக்கின்றன, சீனாவில் 49,400 குழந்தைகள் பிறக்கின்றன.
குறைந்த குழந்தை பிறப்பு விகிதத்தால் சீனாவின் மக்கள்தொகை ஏற்கனவே சுருங்கி வருகிறது. இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு பில்லியனுக்கும் கீழ் மக்கள்தொகை குறையும்.
இந்தியாவின் மக்கள்தொகை 2064 வரை தொடர்ந்து வளரும் என்றும், இன்றைய 1.4 பில்லியனிலிருந்து 2064ல் 1.7 பில்லியனாக உயரும் என்றும் ஐ.நா. கூறுகிறது.
அது இந்தியாவிற்கு பொருளாதார ரீதியிலும் பலனளிக்கும். பணியில் ஈடுபடும் வயதுடைய மக்கள்தொகை அதிகரித்து வருவதால் விரைவான பொருளாதார வளர்ச்சியை அது குறிக்கிறது.
“இந்தியாவில் 1990களில் அதிகரித்த சீர்திருத்தங்களே இப்போது பலனளிக்கிறது. ஆனால் வேலை செய்யும் வயதுடையவர்கள் எந்த அளவிற்கு படித்தவர்களாக, ஆரோக்கியமாக, திறமையானவர்களாக மற்றும் பொருளாதாரத்திற்கு பங்களிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையில் முக்கியமானது,” என்று நியூ யார்கின் நியூ ஸ்கூலைச் சேர்ந்த இந்தியா சீனா நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் மார்க் ஃப்ரேசியர் விளக்குகிறார்.
மக்கள்தொகையில் சீனாவை முந்திய இந்தியா வல்லரசாகவும் விஞ்ச முடியுமா?
சமீபத்திய மாதங்களில் ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்திருந்தாலும், இந்தியாவின் உள் அதிகாரத்துவம் மற்றும் கொள்கை மாற்றங்களால் ஏற்படும் உறுதியற்ற தன்மை, சில சர்வதேச முதலீடுகளை பயமுறுத்துகின்றன.
“உங்கள் மக்கள் தொகை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு சக்தி வாய்ந்தவர் நீங்கள் என்பது 19ஆம் நூற்றாண்டின் கருத்து” என்று தெரிவிக்கும் பேராசிரியர் ஃப்ரேசியர், மேலும் பல காரணிகளைச் சுட்டிகாட்டுகிறார்.
இன்று, வேலை செய்யும் வயதுடைய இந்தியர்களில் பாதி பேர் மட்டுமே உண்மையில் வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேடுகிறார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
பெண்களைப் பொறுத்தவரை, இது 25% ஆக குறைகிறது. இது சீனாவில் 60%ஆகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 52%ஆகவும் உள்ளது.
1980கள் மற்றும் 1990களில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களுக்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மற்ற எந்த நாட்டையும் விட அதிகமாக வளர்ந்துள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்று, முதியோர் எண்ணிக்கை மற்றும் மேற்கு நாடுகளுடன் அதிகரித்து வரும் பதட்டங்கள் ஆகியவை நாட்டின் வளர்ச்சியை பாதித்துள்ளன.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏற்கனவே சீனாவை விட வேகமாக வளர்ந்து வருகிறது – மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகள் அது தொடரும் என்று காட்டுகின்றன.
“2030 வரை சீனா 4% அல்லது 5% வளர்ச்சி அடைந்தால், அது ஒரு ஈர்க்கக்கூடிய சாதனையாக இருக்கும். 8-9% வளரும் ஒரு நாட்டிற்கு இது மோசமான மந்தநிலை என்று மக்கள் நினைக்கலாம், ஆனால் அது உண்மையில் சரியான வழி அல்ல” என்று பேராசிரியர் ஸ்பென்ஸ் விளக்குகிறார்.
“சீனா இப்போது அமெரிக்காவைப் போலவே உள்ளது. அந்த 8, 9, 10% விகிதங்களில் நாங்கள் ஒருபோதும் வளர்ந்ததில்லை. அவர்கள் உற்பத்தித்திறன் வளர்ச்சியை நம்பியிருக்கப் போகிறார்கள்.
மேலும் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரிய முதலீடுகளால் அவர்கள் அதை அடைய முடியும் என்று நான் நினைக்கிறேன்.” என்றும் ஸ்பென்ஸ் கூறினார்.
சீனா மற்றும் இந்தியா இரண்டும் அணுசக்தி வல்லரசுகளாக இருப்பது, அவற்றிற்கு உலகின் சதுரங்கப் பலகையில் ஒரு மூலோபாய இடத்தை வழங்குகின்றன.
சீனாவின் அணு ஆயுதக் கிடங்கு இந்தியாவை விட இரண்டரை மடங்கு பெரியது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.
சீனா ஆயுதப் படைகளில் கிட்டத்தட்ட 6 லட்சத்துக்கும் அதிகமானோரைக் கொண்டுள்ளது மற்றும் அதன் பாதுகாப்புத் துறையில் தீவிரமாக முதலீடு செய்கிறது.
“ராணுவத்தைப் பொறுத்தவரை இந்தியா ரஷ்யாவை பெரிதும் சார்ந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை இறக்குமதி செய்கிறது. அதேசமயம் சீனா பல ஆராய்ச்சிகள் மூலம் உள்நாட்டு ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று பேராசிரியர் ஃப்ரேசியர் கூறுகிறார்.
பாதுகாப்புத் துறையில் சீனா தெளிவான ஆதாயத்தைக் கொண்டிருந்தாலும், உலகின் பெரும்பாலான ராணுவ சக்திகள் அமர்ந்திருக்கும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த உறவைக் கொண்டுள்ளது.
“இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியா ஒரு முக்கியமான மூலோபாய பங்காளியாக இருக்க முடியும், அங்கு அமெரிக்க அரசாங்கம் சீனாவைச் சுற்றி ஒரு வகையான பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. அதில் கிழக்கு ஆசியா மட்டுமல்ல, தெற்காசியாவும் அடங்கும். பசிபிக் மேற்கு பசிபிக் பெருங்கடல் மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலும் அடங்கும்,” என்று பேராசிரியர் ஃப்ரேசியர் மேலும் கூறுகிறார்.
மக்கள்தொகையில் சீனாவை முந்திய இந்தியா வல்லரசாகவும் விஞ்ச முடியுமா?
பூகோள அரசியல் மாற்றுகள்
இந்தியா இந்த ஆண்டு G20 உச்சிமாநாட்டை நடத்துகிறது. உலக செல்வத்தில் 85% தன்னை உயர்த்திக் கொள்ள, அதனை ஒரு வாய்ப்பாக இந்தியா பார்க்கிறது.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்ததில் இருந்து உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளுடனான சீனாவின் உறவு அதிகளவில் சேதமடைந்துள்ள நிலையில், ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா முதல் சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வரை 120 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் சீனா முக்கிய பொருளாதார பங்காளியாக உள்ளது.
அதன் பல டிரில்லியன் டாலர் மதிப்பிலான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி, வெளிநாடுகளில் சீனாவின் அரசியல் செல்வாக்கை மேம்படுத்துகிறது.
இந்தியா ஒரு முக்கிய புவிசார் அரசியல் பங்காளியாக மேற்கத்திய நாடுகளால் பார்க்கப்பட்டாலும், சீனாவிற்கு ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ஐந்து இடங்களில் ஓரிடம் உள்ளது. அதாவது அமைப்பு எடுக்கும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய முடிவுகளிலும் அதன் பங்கு இருக்கும். மற்றும் வீட்டோ அதிகாரங்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவும் மற்ற வளர்ந்து வரும் நாடுகளும் பல தசாப்தங்களாக மாற்ற முயற்சித்தும், வெற்றி பெறாத நிலை இது.
“1945 இல் முடிவடைந்த மோதலில் வெற்றி பெற்றவர்கள் இன்னும் உலகளாவிய பாதுகாப்பு ஒழுங்கை இயக்குவதில் அர்த்தமில்லை என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களின் புதிய சீரமைப்பு சரியானது என்று நான் சொல்ல மாட்டேன்” என்று பேராசிரியர் ஃப்ரேசியர் கூறினார்.
இதை, பேராசிரியர் மைக்கேல் ஸ்பென்ஸும் ஒப்புக்கொள்கிறார்.
“வாக்களிக்கும் அதிகாரங்கள், பொருளாதார அளவு மற்றும் செல்வாக்குடன் தொலைவில் கூட ஒத்துப்போவதில்லை. எனவே ஒரு கட்டத்தில் உலகம் இந்த நிறுவனங்களைச் சீர்திருத்தம் செய்யும், அல்லது அவை முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கும், ஏனெனில் மாற்றுகள் உருவாக்கப்படும்.” என்கிறார் ஸ்பென்ஸ்.
தற்போதைய முக்கிய மாற்று ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இது உலகளாவிய வடக்கின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்கை எதிர்கொள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவால் உருவாக்கப்பட்ட ஒரு தொகுதி ஆகும்.
மக்கள்தொகையில் சீனாவை முந்திய இந்தியா வல்லரசாகவும் விஞ்ச முடியுமா?
அமெரிக்க செல்வாக்கை உயர்த்திய ஹாலிவுட்
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, சினிமாவை அமெரிக்க மதிப்புகள் மற்றும் செல்வாக்கை ஏற்றுமதி செய்வதற்கான சக்திவாய்ந்த கருவியாக ஹாலிவுட் மாற்றியது.
சீனாவும் இந்தியாவும் அந்த உத்தியை வெற்றிகரமாகப் பின்பற்றி வருகின்றன.
சீனாவில், 2007ல் இருந்து திரையரங்குகளின் எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்து, தற்போது 80,000ஐ எட்டியுள்ளது. அமெரிக்காவில் 41,000 மற்றும் இந்தியாவில் 9,300 திரையரங்குகளே உள்ளன.
“பெருந்தொற்றுக்கு முன், சீனா தனது வளர்ச்சியின் வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டது மற்றும் திரைப்பட இணை தயாரிப்புகள் மற்றும் ஹாலிவுட் திரைப்பட ஸ்டுடியோக்களை கையகப்படுத்துவதன் மூலம் உலகளவில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தியது” என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் கலாச்சார ஆய்வுகளின் சீனப் பேராசிரியர் வெண்டி சு கூறுகிறார்.
ஆனால், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க திரைப்பட சந்தையை விட சிறப்பாக செயல்பட்ட சீனாவின் பாக்ஸ் ஆபிஸ் 2022 ஆம் ஆண்டில் கோவிட் தொடர்பான சினிமா மூடல்களால் 36% சரிந்தது.
பாலிவுட், ஹாலிவுட்டின் ஆசிய பதிப்பாக பரவலாக அறியப்பட்டாலும், சீனாவுட் என்பது ஒப்பீட்டளவில் பலருக்கு அறிமுகமில்லாத சொல்லாகவே உள்ளது.
“உலகம் முழுவதும் பாலிவுட்டின் செல்வாக்கு மிகப் பெரியதாகவும் வலுவாகவும் உள்ளது” என்கிறார் பேராசிரியர் சு.
“சீனாவில் கூட, பாலிவுட் திரைப்படங்கள் சீன பார்வையாளர்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 2016-ல் வெளியான பாலிவுட் படம் ‘டங்கல்’ சீனாவில் வெளியான ஒவ்வொரு ஹாலிவுட் படத்தையும் விட அதிகமாக வசூலித்து சீன பாக்ஸ் ஆஸ்ஃபீசில் தொடர்ந்து 16 நாட்கள் முதலிடத்தைப் பிடித்தது. மொத்தம் 60 நாட்கள் ஓடியது. இது உலகத் திரைப்பட வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படங்களில் ஒன்றாகும்.” என்கிறார் அவர்.