இந்தியாவின் இமயமலை பள்ளத்தாக்கில் “எலும்புக்கூடு ஏரி” – தொடரும் மர்மத்தின் பின்னணி என்ன?!!
இரண்டாம் உலகப்போரின்போது இமயமலையில் இருக்கும் ஓர் ஆழமான பள்ளத்தாக்கில் ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் ஏரி ஒன்றைக் கண்டுபிடித்தார்.
4800 மீட்டர் உயரத்தில் இருந்த ஒரு சிறிய பனிக்கட்டி ஏரியில் சுத்தமான தண்ணீரில் மர்மமான சில விஷயங்களை அவர் பார்த்தார். அந்த ஏரி முழுவதும் மனித எலும்புக்கூடுகள் நிரம்பியிருந்தன.
தற்போது ரூப்குந்த் ஏரி அல்லது “எலும்புகூடு ஏரி” என்று அது அழைக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்திய நிலப்பரப்பிற்குள் ஊடுருவ முயன்ற ஜப்பானிய ராணுவ வீரர்களின் எலும்புக் கூடுகளாக அவை இருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சினர்.
ஆனால் அந்த எலும்புக்கூடுகள் சுமார் 500 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தன. அதனால் அதற்கு வாய்ப்பில்லை.
பல தசாப்தங்களாக எலும்புக்கூடுகள் அங்கு எப்படி வந்தன என்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவின.
சிலர் அந்த எலும்புக்கூடுகள் போர் முடிந்து, மலைத்தொடர் வழியாகத் திரும்பிய தொன்மையான இந்திய ராணுவத்தினருடையது என்று கூறினார்கள். மேலும் சிலர் இவர்கள் ஏதேனும் நோய்த் தோற்றால் இறந்தவர்களாக இருக்கலாம் என்று கூறினர்.
ஒருவேளை பயங்கரமான பனிப் புயலில் சிக்கி அவர்கள் அங்கு இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் உள்ளூர் கிராமப்புற பாடல் ஒன்று இதற்கு வேறு ஒரு விளக்கத்தை அளித்தது.
இந்த எலும்புக்கூடுகள், மலைகளின் கடவுளான நந்தா தேவியைக் காண, எச்சரித்தவர்களின் பேச்சைக் கேட்காமல் சென்ற சில பக்தர்களுடையது என்று அந்த கிராமப்புற பாடலில் சொல்லப்படுகிறது. அவர்களுடைய பேச்சைக் கேட்காமல் சென்றதால் கடவுள் நந்தாதேவி மலையிலிருந்து இரும்பு போன்ற அதிக எடை கொண்ட உருளைகளை அவர்கள் மீது உருட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த எலும்புக்கூடுகளை ஆராய்ந்ததில் அவர்கள் மீது உருண்டையான ஏதோ ஒரு பொருள் மோதியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
அங்கு எந்த ஆயுதங்களும் இருக்கவில்லை. ஆனால் சில அணிகலன்கள் மற்றும் ஆடைகள் இருந்தன. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்ல உடல் நிலையில் இருந்ததாக அந்த எலும்புக்கூடுகளை ஆராய்ந்ததில் தெரிய வந்தது,
அதனால் அவர்கள் போரிலிருந்து திரும்பியவர்களாகவோ அல்லது நோய்த் தொற்றால் இறந்தவர்களாகவோ இருந்திருக்க வாய்ப்பில்லை.
அதனால் அவர்கள் தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட பக்தர்கள் என்றும் அவர்கள் 9ஆம் நூற்றாண்டில் அங்கு இறந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அங்கிருந்த 38 எலும்புக்கூடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு மாதிரிகளை ஆராய்ந்ததில் அவர்கள் மரபணுரீதியாக வேறுபட்ட மூன்று குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிய வந்தது.
அதில் 23 பேர் தற்கால இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தவர்களாக இருந்தனர். ஒருவருக்கு தென்கிழக்கு ஆசிய பூர்வீகம் இருந்தது. மேலும் அதிர்ச்சிகரமான வகையில் 14 பேருக்கு கிழக்கு மத்திய தரைக்கடல் பூர்வீகம் இருந்துள்ளது.
எனினும் இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவை என்பதும் தெரிய வந்தது.
இவை வெவ்வேறு காலங்களைச் சேர்ந்ததால் இவர்கள் இறந்திருக்கும் விதமும் அதற்கான காரணமும் வெவ்வேறாக இருக்கும் என்பதும் இதிலிருந்து தெரிய வருகிறது.
ஆனால் இறுதியாக இந்த எலும்புக்கூடுகள் எவ்வாறு ரூப்குந்த் ஏரியை அடைந்தன என்பது குறித்து எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.
ஒவ்வோர் ஆண்டும் வசந்த காலம் வரும்போது பனிக்கட்டியால் உறைந்த ஏரி உருகும்போது இந்த எலும்புக்கூடுகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. ஆனால் அவற்றின் பின்னணி குறித்து இதுவரை தெரியவரவில்லை.