தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பா.ஜனதா பாடம் கற்கவில்லை: மந்திரி பரமேஸ்வர் பேட்டி!!
மூத்த மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- 5 முக்கியமான உத்தரவாத வாக்குறுதிகளை அமல்படுத்துவதாக நாங்கள் உறுதியளித்துள்ளோம். அந்த வாக்குறுதிகளை அமல்படுத்த முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே முடிவு எடுத்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இது பா.ஜனதாவினருக்கும் தெரியும். ஆட்சி நிர்வாகத்தை நடத்திய அனுபவம் அவர்களுக்கு உள்ளது. ஒரு திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது அவர்களுக்கு தெரியாதா?. அடுத்த வாரம் 2-வது மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வாக்குறுதிகள் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் தான் அமல்படுத்த வேண்டும். இதை எதிர்க்கட்சிகளால் செயல்படுத்த முடியுமா?. நாங்கள் பொறுப்புடன் பேசுகிறோம். பா.ஜனதா மோசமான ஆட்சியை நடத்தியதால் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர்.
தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பா.ஜனதா பாடம் கற்கவில்லை. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. அவர்களிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டுமா?. இவ்வாறு பரமேஸ்வர் கூறினார். மந்திரி பிரியங்க் கார்கே கூறும்போது, “முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே முடிவு எடுத்துள்ளோம். 15 நாட்களில் முழுமையான அரசை அமைத்துள்ளோம். ஆனால் பா.ஜனதாவால் இன்னும் தனது தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதனால் பா.ஜனதாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.