;
Athirady Tamil News

சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம் முதல் பயணத்தை தொடங்கியது!!!

0

சீனாவில் முதன் முதலாக பயணிகள் விமானத்தை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீனாவின் வணிக விமான கழகத்தால் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2017-ம் ஆண்டு சி-919 என்ற விமானம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பல கட்டமாக சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது. அந்த வகையில் உயர் வெப்பநிலை, அதிக ஈரப்பதம், காற்று மற்றும் உறைபனி உள்ளிட்ட பல்வேறு இயற்கை சூழல்களில் சி-919 விமானம் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் சிவில் விமான நிர்வாகத்தால் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

சி-919 என பெயரிடப்பட்ட இந்த விமானம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசுக்கு சொந்தமான சீனா கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனம் வணிக செயல்பாட்டை கருத்தில் கொண்டு 100 மணி நேர விமான சரிபார்ப்பு பணிகளை நிறைவு செய்தது. இந்த நிலையில் சி-919 விமானம் நேற்று தனது முதல் வணிக பயணத்தை தொடங்கியது. சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் ஷாங்காயில் இருந்து அதன் தலைநகரான பீஜிங்குக்கு சென்றடைந்தது. இதனையடுத்து பீஜிங் விமான நிலையத்தில் மரியாதையின் அடையாளமாக இந்த விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இதற்கிடையே விமானத்தின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்திறன் ஆகியவை விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியது. இதன் காரணமாக 32 வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை செய்வதற்கு ஆர்டர் வந்துள்ளதாக அந்த நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச சிவில் விமான சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் போயிங், ஏர்பஸ் போன்ற நிறுவனங்களுக்கு சீனா போட்டியை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.