வரலாற்று சாதனையை முறியடித்த எர்டோகன்- துருக்கி அதிபராக மீண்டும் தேர்வானார்!!
துருக்கியில் கடந்த 15ம் தேதி அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் தய்யீப் எர்டோகனும், எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமல் கிலிக்டரோக்லு இடையே கடும் போட்டி நிலவியது. துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும்,கெமல் கிலிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 28ம் தேதி (நேற்று) அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நேற்று துருக்கியில் அதிபர் தேர்தலின் 2வது சுற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வாக்குகள் பெற்றார். இதன் உறுதியான முடிவு வரும் நாட்களில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. அவர் ஏற்கனவே துருக்கி குடியரசின் நிறுவனர் முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் 15 ஆண்டு ஜனாதிபதி பதவி சாதனையை முறியடித்துள்ளார்.