அமெரிக்காவின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் முடிவு – ஜூன் 5 வரை கெடு..!!
அமெரிக்க பொருளாதாரம் உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின்பு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது, கச்சா எண்ணெய் விலையில் தொடக்கி காய்கறி வரையில் அனைத்தும் விலை உயர்ந்து பணிவீக்கம் அதிகரித்தது.
இதை கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் முதலீட்டு சந்தை தலைகீழாக மாறியது, இதனால் வங்கிகள் திவால் ஆனது முதல் ஊழியர்கள் பணிநீக்கம், நிறுவனங்கள் மூடல் வரையில் சென்றது.
ஆனால் இவை அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாக வந்த பிரச்சனை தான் அமெரிக்க அரசின் கடன் வரம்பு பிரச்சனை. அமெரிக்கா வல்லரசு நாடாக இருந்தாலும், பல சேவைகளையும், செலவுகளையும், முதலீடுகளையும் கடன் அடிப்படையில் தான் செய்து வருகிறது.
இந்த நிலையில் அந்நாட்டின் அதிகப்படியான கடன் வரம்புக்கு இணையாக கடன் வாங்கப்பட்டு உள்ளது. அதாவது அரசின் அதிகப்படியான கடன் வரம்புக்கு இணையாக கடன் வாங்கப்பட்டதால், இனி கூடுதலாக கடன் வாங்கி செலவு செய்ய முடியாது.
செலவுக்கு பணம் இல்லையெனில் மக்களுக்கு அளிக்கப்படும் சேவையில் இருந்து அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டும் சம்பளம் என அனைத்திற்கும் பண தட்டுப்பாடு உருவாகி அமெரிக்க பொருளாதாரம் திவாலாகும் நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறிருக்க அமெரிக்க அரசு கடன் வரம்பை அதிகரிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை எனில் அமெரிக்கா பொருளாதாரம் திவாலாகிவிடும்.
இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக அமெரிக்க கருவூல தலைவர் ஜெனட் யெலன் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்கட்சி தலைவர்கள், முக்கிய அரசு அதிகாரிகள் நேரில் சந்தித்து அமெரிக்க பொருளாதாரம் திவால் ஆவதை எப்படியாவது தடுக்க வேண்டும் அதற்கு கடன் வரம்பை அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கு அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் ஜோ பைடன் மற்றும் எதிர்கட்சியான குடியரசுக் கட்சித் தலைவர் மெக்கார்த்தி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க பொருளாதாரம் திவால் ஆவதில் இருந்து தடுக்க அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான இறுதி இரு-கட்சி மசோதா தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் முன்னிலையில் வைக்கப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தம் அரசிடம் பணம் இல்லாமல் போகும் முன் நிறைவேற்றப்பட வேண்டும் என ஜோ பைடன் தெரிவித்தார். ஜூன் 5 ஆம் தேதிக்குள் கடன் வரம்பை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த மசோதா இரு கட்சிகளும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட மசோதாவாக இருந்தாலும், பொதுவெளியில் வெளிப்படையாக வாக்குகள் பெற்றோ அல்லது வாய்மொழியில் வாக்கெடுப்பு நடத்தியோ ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
இரு கட்சி தவைவர்களாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் எதிர்கட்சியான குடியரசு கட்சி, ஜோ பைடன் அரசிடம் பல்வேறு செலவுகளை குறைக்க கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
இது இந்த மசோதாவில் உள்ளதா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. ஏற்கனவே செலவுகளை குறைக்க மறுப்பு தெரிவித்த ஜோ பைடன் அரசு இந்த மசோதாவில் செலவுகள் குறைப்புக்கான நடவடிக்கைகள் இல்லாத பட்சத்தில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.