சித்தூர் அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் கடத்திய 8 பேர் கைது!!
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். நேற்று 8 பேர் கும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றினர். செம்மரக்கட்டைகளை கர்நாடக மாநில கடிகனஹள்ளியை சேர்ந்த இம்ரானுக்கு கடத்தி சென்றனர். சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் மண்டலம் மகா சமுத்திரம் சுங்கச்சாவடி அருகே டி.எஸ்.பி. சுதாகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக செம்மரம் கடத்தி வந்த 2 கார்களை மடக்கி பிடித்தனர். காரில் வந்த கோலார் மாவட்டம் பேத்தமங்களத்தை சேர்ந்த அப்துல் ரஹிமான் (வயது26), திரு வண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூரை சேர்ந்த மகேந்திரன் (35), திருப்பத்தூர் மாவட்டம் தகரக்குப்பத்தை சேர்ந்த காளியப்பன் (42), பி.மகாதேவன் (36), வாணியம்பாடியை சேர்ந்த ஜி.சிவன் (45), ஆர்.சின்னத்தம்பி (62), எம்.சிவசங்கர் (30), கே.ரவி (36) ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செம்மர கடத்தலில் ஈடுபட்ட கர்நாடகாவை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.