தொடர் வன்முறை – மணிப்பூர் ஆளுநரை சந்தித்தார் உள்துறை மந்திரி அமித் ஷா!!
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நான்கு நாட்கள் பயணமாக நேற்று மணிப்பூர் சென்ற அமித் ஷா, மாநில முதல்வர் பைரென் சிங் மற்றும் மாநில மந்திரிகள், பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். மாநில உள்துறை மந்திரி நித்யானந்த் ராய், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பாலா, உளவுத்துறை தலைவர் தபன் டேக்கா மற்றும் சில உயர் அதிகாரிகளை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் சென்றதும், அமித் ஷா மாநிலத்தின் மூத்த அதிகாரிகள், மந்திரிகளை சந்தித்தார். ஜூன் 1 ஆம் தேதி வரை மணிப்பூரில் இருக்கும் அமித் ஷா பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார். மணிப்பூர் கலவரத்தில் காவல் அதிகாரி உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வீடு தாக்கப்பட்டது மற்றும் காவல் துறை ஆயுத கிடங்கில் இருந்து பயங்கரவாதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களை திருடி சென்றது என மாநிலம் முழுக்க கலவர சூழல் நிலவுகிறது.