கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன?: பிரதமர் மோடியிடம் மூத்த நிர்வாகி பகீர் புகார்!!
கர்நாடக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது. அக்கட்சி 86 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் 13 மந்திரிகள் படுதோல்வி அடைந்தனர். காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தோல்வி பா.ஜனதா தலைவர்கள் மட்டுமல்ல தொண்டர்களையும் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கான காரணம் பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது 40 சதவீத கமிஷன் விவகாரம், எம்.எல்.ஏ.க்களை ஓரங்கட்டிவிட்டு புதுமுகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது. மூத்த தலைவர்களை தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெற வைத்தது உள்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தல் தோல்வி பற்றி கர்நாடக பா.ஜனதா மூத்த நிர்வாகி ஒருவர், சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்துள்ளது. அப்போது அந்த மூத்த நிர்வாகி, சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தோல்விக்கான காரணம் பற்றி பிரதமரிடம் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். அதாவது, தேர்தலில் டிக்கெட் வினியோகம் முறையாக நடைபெறவில்லை.
மாநிலத்தில் பா.ஜனதா ஆளுங்கட்சியாக இருந்த நிலையிலும் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை முறையாக வழிநடத்தவில்லை. அவர்களை புறக்கணித்துள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரத்தில் தொண்டர்கள் உற்சாகமாக ஈடுபடவில்லை. இதுவும் தோல்விக்கு ஒரு காரணம். அதுபோல் கட்சி தலைவர்கள் ஒருவரையொருவர் தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டினர். இதனால் அவர்கள் தோல்வி அடைந்தனர். 40 சதவீத கமிஷன் விவகாரத்தில் காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு, பா.ஜனதா தலைவர்கள் சரியான பதிலடி கொடுக்காததும் தோல்விக்கு மற்றொரு காரணம்.
மேலும் நீங்கள் மட்டும் பிரசாரத்திற்கு வராமல் இருந்திருந்தால் பா.ஜனதா 35 இடங்களை கூட பெற்றிருக்காது என்றும் அந்த மூத்த நிர்வாகி, பிரதமர் மோடியிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், கர்நாடகத்தில் அதிக இடங்களை கைப்பற்ற பிரதமர் மோடி தற்போதே திட்டமிட்டு வருவதாகவும், இதனால் சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.