;
Athirady Tamil News

சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா!!

0

சீனா, விண்ணில் தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. டியாங்காங் என பெயரிடப்பட்ட இந்த விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் வரை தங்கலாம். இங்கு சீன விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் சீனாவின் விண்வெளி நிலையத்துக்கு இன்று 3 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் சீனாவின் பொதுமக்களில் ஒருவரும் அடங்கும். லாங் மார்ச்-2 எப் ராக்கெட்டில் ஜிங் ஹய்பெங், ஜுயங்ஜு, குய் ஹய்ச்சவ் ஆகிய 3 வீரர்கள் விண்ணுக்கு புறப்பட்டனர். இந்த ராக்கெட் வடமேற்கு சீனாவில் உள்ள கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பெய் ஹாங் பல்கலைக்கழக பேராசிரியர் குய் ஹய்ச்சவ் விண்வெளிக்கு சென்ற முதல் சீன குடிமகன் என்ற சிறப்பை பெற்றார். ஷென்சோ-16 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள இந்த மூன்று வீரர்களும், கடந்த நவம்பர் மாத இறுதியில் விண்வெளி நிலையத்துக்கு வந்த 3 பேர் கொண்ட குழுவினர் மாற்றாக விண்வெளி நிலையத்தில் இடம் பெறுவார்கள். அவர்கள் 5 மாதங்கள் தங்கி ஆய்வு பணியை மேற்கொள்வார்கள்.

இதற்கிடையே வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீன விண்வெளி ஆய்வு மைய பிரிவு இணை இயக்குனர் லின் ஷிகியாங் கூறும்போது, “2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கு சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வது மட்டுமின்றி, வேற்று கிரகத்துக்கு மனிதர்களை அழைத்து செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.