அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி!!
அமெரிக்க ராணுவ வீரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தேசிய நினைவு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தேசிய நினைவு நாளை அனுசரித்தனர். இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. 8 மாகாணங்களில் கடற்கரைகள், உயர்நிலைப் பள்ளிகள், மோட்டார் பேரணிகள் ஆகியவற்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அமெரிக்கா முழுவதும் ஒரே நேரத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடக்கிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் துப்பாக்கி சூடு தொடர்ந்தபடியே உள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியாவில் வசித்து வந்தவர் ஜுட் சாக்கோ (வயது21). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இருந்து சுமார் 30 ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். மாணவரான ஜுட் சாக்கோ, பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஜுட் சாக்கோ, வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரிடம் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
தன்னிடம் இருந்த பணத்தை ஜுட் சாக்கோ கொடுக்க மறுத்ததால் அவரை சுட்டுக் கொன்று விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் ஓகியோவில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் சாயேஷ் வீரா சுட்டுக் கொல்லப்பட்டார். கொள்ளை முயற்சியை தடுத்த அவரை மர்ம நபர் சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.