காஷ்மீரில் இந்து தொழிலாளியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்!!
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபு. இவர் அனந்த்நாக் மாவட்டம் ஜங்லாத் மண்டி பகுதியில் நடந்த சர்க்கசில் வேலை பார்த்து வந்தார். அங்கு சர்க்கஸ்காரர்கள் முகாம் அமைத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் தீபு நேற்று இரவு பால் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், தீபுவை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். தீபு உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்தது. அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலைக்கு பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கொலையாளிகளை விரைவில் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்து மாறு போலீசாருக்கு ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில் கூறும்போது, “தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பொதுமக்களுக்கு எதிராக மற்றொரு இலக்கு தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியால் வேதனை அடைந்தேன். நேர்மையாக சம்பாதித்து சர்க்கசில் பணியாற்றிய தீபு கொல்லப்பட்டது அருவருப்பானது. இந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.