ரஷ்ய உளவு திமிங்கலம் தொடர்பில் புதிய சர்ச்சை..!
ரஷ்ய ‘உளவு’ திமிங்கலம் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் சுவீடன் கடற்கரையினில் மேற்பரப்புக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019-ஆம் ஆண்டில் நோர்வே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டபோது சர்வதேச தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்திகளில் வந்த குறித்த திமிங்கலம், இப்போது மூன்று ஆண்டுகளுக்கும் பிறகு சுவீடன் கடற்கரையில் சுற்றித்திரிவதாக அச்சம் எழுந்துள்ளது.
சுவீடனின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள ஹன்னெபோஸ்ட்ராண்டில் அந்தத் திமிங்கலம் சுற்றித் திரிவதைக் கடல் உயிரியலாளர்கள் கண்டுள்ளனர்.
ஆனால் அது வேகமாக சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். “அது ஏன் இப்போது அவ்வளவு வேகமாகச் சென்றது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றும், அது ஹார்மோன் மாற்றத்தல் ஒரு துணையை தேடிக்கொண்டிருக்கலாம்,” என தெரிவித்துள்ளார்.
“ஹ்வால்டிமிர்” என்ற புனைப்பெயர் கொண்ட இந்த திமிங்கலம், முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதில் ஒளிப்பட கருவி பொறுத்தக்கூடிய சேணம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சேணத்தில் Equipment St Petersburg என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்ததால், இந்த திமிங்கலம் ஒரு ரஷ்ய உளவாளி என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், திமிங்கலத்தை உளவாளியாக பயன்படுத்துவதாக ரஷ்யா ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், வெளிவரும் செய்திகளுக்கு எந்த அதிகாரப்பூர்வ எதிர்வினையையும் வெளியிடவில்லை.
பெலுகா திமிங்கலங்கள் 40 முதல் 60 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை, சுமார் ஆறு மீட்டர் அளவை எட்டும். அவை பொதுவாக கிரீன்லாந்து, வடக்கு நோர்வே மற்றும் ரஷ்யாவைச் சுற்றியுள்ள பனிக்கட்டி நீரில் காணப்படுகின்றன.