சத்தீஸ்கரில் செல்போனை மீட்க அணையை ‘காலி’ செய்த அதிகாரிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம்!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறிவிழுந்த தனது செல்போனை மீட்க ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவுப்பொருள் ஆய்வாளர் அணை நீரை ‘காலி’ செய்த சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அதிகாரி ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவருக்கு வாய்மொழியாக அனுமதி அளித்த நீர்வளத்துறை அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சத்தீஷ்கர் நீர்வளத்துறை சார்பில் அதிகாரி ராஜேசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், உரிய அனுமதி பெறாமல் டீசல் மோட்டார்களை பயன்படுத்தி 4 ஆயிரத்து 104 கனஅடி நீரை நீங்கள் வீணாக்கியுள்ளீர்கள். இது சட்டவிரோத செயலாகும். இதற்காக ஒரு கனஅடி நீருக்கு ரூ.10.50 வீதம் மொத்தமாக ரூ.43 ஆயிரத்து 92-ஐ செலுத்த வேண்டும். அத்துடன் அனுமதியின்றி நீரை வெளியேற்றியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். இரண்டையும் சேர்த்து மொத்தமாக ரூ.53 ஆயிரத்து 92-ஐ 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.