சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணங்களை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணங்களை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார் . டோக்கியோவிலிருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சென்னைக்கு முதல்வர் இன்று இரவு 10 மணிக்கு வர உள்ளார்.
கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 2024ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள முன்னணி நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்து சென்னையில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
அதைத்தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து கடந்த 25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றார். அங்கு ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் ஜப்பானில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
சென்னையில் ரூ.818 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மேலும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலைகள் தொடங்க ரூ.128 கோடி மதிப்பில் டோக்கியோவில் தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் இன்று இரவு 10 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.