10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் ராகுல் காந்தி!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவுடன் தனது எம்.பி. பதவியை இழந்தார். உடனே தனது சிறப்பு பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். அவர் அமெரிக்கா செல்ல உள்ளதால் புதிய சாதாரண பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார். அவர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் தடையில்லா சான்று கோரி, டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
புகார்தாரரான சுப்பிரமணிய சாமி, சான்று தர எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை, ராகுல் காந்திக்கு கோர்ட்டு 3 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட் அளிக்க தடையில்லா சான்று அளித்தது. இதையடுத்து, ராகுல் காந்திக்கு நேற்று பாஸ்போர்ட் வந்து சேர்ந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இன்று இரவு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ராகுல் காந்தி வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களுக்கும் பயணம் செய்ய உள்ளார்.