வருமான வரி அதிகாரிகள் போல நடித்து நகை கடையில் ரூ.60 லட்சம் தங்க பிஸ்கெட் கொள்ளை!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மோண்டா மார்க்கெட்டில் சித்தி விநாயக் என்ற பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த 27-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் டிப்டாப் உடைய அணிந்து கார்களில் வந்து இறங்கினர். அவர்கள் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி போலியான அடையாள அட்டைகளை காண்பித்தனர். இதனை நம்பி கடை ஊழியர் மற்றும் உரிமையாளர்கள் அவர்களை சோதனை நடத்த அனுமதித்தனர். அவர்கள் கடையில் இருந்த ஆவணங்கள் மற்றும் நகைகளை சரிபார்த்தனர். அப்போது சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகுதான் வந்தவர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்த திருட்டு கும்பல் என தெரியவந்தது.
இது குறித்து கடையின் உரிமையாளர் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார். ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தலைமையில் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். கும்பல் வந்த கார் பதிவு எண் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து தங்க பிஸ்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர்.
விசாரணையில் அவர்கள் ரகுமான் கபூர் அதர், ஜாகிர் கனி அதர், பிரவீன் யாதவ் மற்றும் ஆகாஷ் அருண் ஹோவில் என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 தங்க பிஸ்கெட்டுகள் மீட்கப்பட்டன. மேலும் 6 பேர் தலைமறைவாகி விட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் கோவா பகுதிகளுக்கு அவர்கள் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தெரிவித்துள்ளார்.