தீபாவளிக்குப் பொது விடுமுறை?
தீபாவளி அன்று பொது விடுமுறை அளிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதாவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 22ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பின் பேரிலேயே இப்பயணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியர்களால் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளியன்று அமெரிக்காவில் பொது விடுமுறை அளிக்கும் வகையில் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கான மசோதாவொன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்க பெண் எம்பி கிரேஸ் மெங் கடந்த வெள்ளிக்கிழமை பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்தார்.
அத்துடன் ”நியூயோர்க் மற்றும் அமெரிக்காவில் உள்ள எண்ணற்ற குடும்பங்களுக்கு தீபாவளி ஒரு முக்கியமான பண்டிகையாகும். இதனால் இந்நாளை விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தேசத்தின் பல்வேறு கலாச்சார அமைப்புகளுக்கு அமெரிக்க அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியும்” இவ்வாறு தெரிவித்தார்.
இம் மசோதாவானது நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி ஜோ பிடனின் ஒப்புதலுக்குப் பிறகு அது சட்டமாக மாறும் எனக் கூறப்படுகின்றது.