வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் – 25 முறை மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை !!
குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ சாஹு. இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு இவரின் மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்தனர். அதற்கு அவர், வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும் என அனுமதி மறுத்துள்ளார். இதனால் 3 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமானுஜ சாஹு, வீட்டின் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து மகளைக் குத்தியிருக்கிறார். தடுக்க வந்த குடும்பத்தினரையும் கத்தியால் தாக்கியிருக்கிறார்.
இதில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் கத்திக்காயம் ஏற்பட்டிருக்கிறது. மகளையும், மனைவியையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். ஆத்திரத்தில் மகளை மட்டும் ஏறத்தாழ 25 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன. இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த தந்தை மகளை 25 முறை கத்தியால் குத்திக் கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.