மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் உலகளவில் நாட்டின் நற்பெயர் கெட்டுவிட்டது- மம்தா பானர்ஜி!!
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார். கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹஸ்ரா சாலையில் இருந்து ரவீந்திர சதன் வரை நடைபெற்ற பேரணியில் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி, பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:- எங்கள் மல்யுத்த வீரர்களால் நாங்கள் பெருமைக்கொள்கிறோம். மல்யுத்த வீரர்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். இது உலகளவில் நாட்டின் நற்பெயரைக் கெடுத்துவிட்டது. எனது ஒற்றுமை அவர்களுடன் உள்ளது. அவர்களின் போராட்டத்தை தொடரச் சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார்.