மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க நீதி விசாரணை ஆணையம் அமைப்பு !!
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகா மற்றும் குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி பழங்குடிகளுக்கு இடையே அவ்வப்போது ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. இந்த வன்முறை சம்பவங்களில் 80-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த அந்த மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 4 நாள் பயணமாக அந்த மாநிலத்துக்கு சென்றார்.
அங்கு மைதேயி, குகி சமூக தலைவர்களை நேற்று முன்தினம் சந்தித்தார். பிரச்சனைக்கு தீர்வு காண உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக மோரே பகுதிக்கு அமித்ஷா நேற்று சென்றார். இந்த பகுதி இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ளது. அதை தொடர்ந்து காங்போக்பி பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்று குகி சமூகத்தினரை சந்தித்தார். அந்த பகுதியில் உள்ள சிவில் சமூக அமைப்புகளையும் சந்தித்தார். இம்பாலில் மைதேயி சமூகத்தினர் தங்கியுள்ள நிவாரண முகாமுக்கும் அவர் சென்றார்.
இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அறிவித்து உள்ளார். இது தொடர்பாக இம்பாலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக நிவாரண முகாம்களில் உள்ள குகி மற்றும் மைதேயி குழுக்களை சந்தித்து விவாதித்தேன். கலவரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐேகார்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை விரைவில் அமைக்கப்படும். மணிப்பூர் கலவரம் தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும். மணிப்பூர் வன்முறைக்கு பின்னால் உள்ள கிரிமினல் மற்றும் பொதுவான சதிகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும். இங்கு நிலவும் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாகும். மணிப்பூர் கவர்னர் தலைமையில் முக்கியப் பிரமுகர்கள் கொண்ட அமைதி குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் அனைத்து அரசியல் கட்சிகள் மைதேயி, குகி சமூகத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்று உள்ளனர்.
கலவரத்தில் காயம் அடைந்தோர், சொத்துக்களை இழந்தோருக்கு நிவாரணம் நாளை அறிவிக்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 5 மருத்துவ குழுக்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்படும். ஆயுதங்களை யாரேனும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தால் உடனே ஒப்படைக்க வேண்டும். மணிப்பூர்-மியான்மர் எல்லை பாதுகாப்பாக இருக்கிறது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.