30 வருசம்… உன்ன பிரிஞ்சி இருந்ததே இல்லையேடா…ஓய்வுக்கு முன் பஸ்ஸை கட்டிபிடிச்சி அழுத டிரைவர்!! (PHOTOS)
மெல்ல விடை கொடு.. விடை கொடு மனமே..! 30 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறும் நாளில் கண்ணீரோடு கடைசியாக தான் ஓட்டிய பேருந்தை கட்டிப்பிடித்து மதுரை ஓட்டுநர் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மதுரை மாவடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முத்துப்பாண்டி என்பவர் திருப்பரங்குன்றம் பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுனராக 30 வருடங்களாக பணியாற்றி வந்தார். அனுப்பானடி டூ மகாலட்சுமி நகர் பகுதியில் பேருந்து ஓட்டி வந்தார். இன்றுடன் முத்துப்பாண்டி ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து தான் இத்தனை வருடங்களாக ஓட்டி வந்த அரசு பேருந்தை தொட்டு பார்த்து, கண்ணீருடன் முத்தம் கொடுத்துவிட்டு கலங்கிய படி பேசினார். இனி என்று நான் உன்னை பார்ப்பேன் என்று அவரது ஏக்கத்தை பார்த்தவர்கள் உருகிப்போனார்கள்.
போ உறவே.. போ உறவே.. எனை மறந்து நீயும் போ.. என்று பேருந்தை விட்டு அந்த டிரைவர் பிரிந்து சென்ற அந்த காட்சி இணையவாசிகளை கலங்க வைத்துள்ளது.
டிரைவர் முத்துப்பாண்டி பேசுகையில், நான் ஓட்டுநர் தொழிலை மிகவும் நேசித்தேன். என் பெற்றோருக்கு அடுத்தபடியாக என் ஓட்டுநர் தொழிலை தான் நேசித்தேன். இந்த வேலைக்கு பின்பு தான் என் மனைவி. என் மனைவி மக்கள் இதற்கு பின்னரே வந்தார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து கொடுத்தது இந்த ஓட்டுநர் தொழில். இதை வணங்கி விடைபெறுகிறேன். எனது 30 ஆண்டுகால சர்வீஸை நிறைவு செய்து, மனம் திருப்தியாக செல்கிறேன். போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றி.வாழ்த்துக்கள்.