நான் பா.ஜ.க.வைச் சேர்ந்தவள்.. ஆனால் கட்சி என்னது அல்ல: பங்கஜா முண்டேவின் கருத்தால் சலசலப்பு !!
மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளருமான பங்கஜா முண்டே, பாஜக குறித்து கூறிய கருத்து மகாராஷ்டிர அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா முண்டே, 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்து, தான் உண்டு தன் வேலை உண்டு என செயல்பட்டு வருகிறார். அரசியல் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்த்து வருகிறார். 2014-2019 காலகட்டத்தில் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது பங்கஜா முண்டே கேபினட் அமைச்சராக இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக, மாநில பாஜகவால் பங்கஜா முண்டே ஓரங்கட்டப்பட்டதாக யூகமான செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கஜா முண்டே பேசியது அரசியல் அரங்கில் விவாதப்பொருளாகி உள்ளது. அவர் பேசும்போது, பாஜக ஒரு பெரிய கட்சி என்றும், அது தனக்கு சொந்தமானது அல்ல என்றும் கூறினார். மகாதேவ் ஜங்கரின் ஆர்எஸ்பி கட்சியை குறிப்பிட்டு பேசிய அவர், “நான் பாஜகவைச் சேர்ந்தவள். என் தந்தையுடன் ஏதாவது பிரச்சனை என்றால், என் சகோதரரின் வீட்டுக்கு செல்வேன்” என்றார். கோபிநாத் முண்டேவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்த மகாதேவ் ஜங்கர் கூறுகையில், வேறு யாரிடமோ ரிமோட் கண்ட்ரோல் இருக்ககூடிய என் சகோதரியின் கட்சியால் நமது சமூகத்திற்கு பயன் கிடைக்காது என்றார். பங்கஜா முண்டேவின் இன்றைய கருத்தை வைத்து பார்க்கும்போது, அவர் ஆர்எஸ்பி கட்சிக்கு செல்ல உள்ளதாக சூசகமாக கூறியிருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.