உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி குண்டு வீச்சு: குழந்தை உள்பட 3 பேர் பலி!!
உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். நேட்டோவில் இணைந்ததால் உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கிவ், பாக்முட் உட்பட பல நகரங்கள் சின்னபின்னமாகி விட்டன. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஓராண்டை கடந்து நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகளும், ஐநாவும் முயற்சி எடுத்து வந்தாலும் போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா 17 ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்த உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் 10 ஆளில்லா விமானங்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதல்களில் கிவ் நகரில் வீடுகள், மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் கெர்சன் பகுதியில் 3 வான்வழி தாக்குதல்களையும், பிற இடங்களில் பீரங்கி தாக்குதல்களையும் ரஷ்யா நடத்தியதில் பல்வேறு பகுதிகள் சீர்குலைந்தன.