பீகாரில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பணிக்கு வராத 62 அரசு டாக்டர்கள்!!
பீகார் மாநில சுகாதாரத்துறை, அறிவிப்பு இல்லாமல் நீண்ட காலமாக விடுப்பில் இருந்த 62 அரசு டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களில் சிலர் ஒரு ஆண்டாகவும், மேலும் சிலர் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பு சுகாதார துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அனுமதியற்ற விடுமுறைக்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்-மந்திரி நிதிஷ்குமார் மற்றும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பதில் அளிக்காத டாக்டர்களுக்கு தற்போது பகிரங்க நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது. இனி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர இருக்கிறது. அதிகபட்ச ஒழுங்கு நடவடிக்கையாக தவறு செய்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட சட்டத்தில் இடம் உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.