;
Athirady Tamil News

நாங்கள் உங்கள் நாட்டு மக்களில்லையா? ஏன் வஞ்சிக்கின்றீர்கள்? ஜனாதிபதியிடம் வடக்கு கடற்தொழிலாளர் சமூகம் கேள்வி!!

0

நாங்கள் உங்கள் நாட்டு மக்களில்லையா? ஏன் வஞ்சிக்கின்றீர்கள்? ஜனாதிபதியிடம் வடக்கு கடற்தொழிலாளர் சமூகம் கேள்வி

வடமாகாண கடற்தொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதிகளின் ஊடக சந்திப்பு 01.06.2023 அன்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த கடற்தொழிலாளர் சம்மேளனங்களின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா,

வடமாகாண கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் சமாசங்கள் ஒன்றிணைந்து எங்கள் பிரச்சினைகளை தெளிவுபடுத்தி வருவதோடு அவற்றுக்கு தீர்வு பெற்றுத் தரவேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம்.

காங்கேசன்துறை தொடக்கம் பருத்தித்துறை வரையான கடல் பிரதேசத்தில் சுருக்குவலைகளை பாவித்து மீன் பிடிப்பதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். சட்ட விரோத சுருக்கு வலையால் சிறிய மீன்களும் பிடிபடும் போது எங்களின் வாழ்வாதாரமும் எதிர்கால வாழ்வும் கேள்விக்குறியாகிறது. இதனை தடுக்கக் கோரி கடந்த காலங்களில் ஜனாதிபதிக்கு மூன்று மகஜர்களை அனுப்பி இருந்தோம். இதுவரை பதிலில்லை.

அந்த வகையில் வடக்கு கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக மகஜர் ஒன்றினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு 17.12.2022 அன்று அனுப்பி வைத்திருந்தோம். வடக்கு கடற்தொழிலாளர்கள் 18 சமாசங்கள், சங்கங்கள் ஒன்றிணைந்து இரண்டாவது மகஜரை 26.02.2023 அன்று வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தோம். இரண்டுக்கும் இதுவரை பதில் வரவில்லை.

மூன்றாவதாக 03.04.2023 அன்று நாங்கள் பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு வடக்கு கடற்தொழில் சமூகத்தை நசுக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதிக்கு மூன்றாவது மகஜரை பருத்தித்துறை பிரதேச செயலகமூடாக அனுப்பி இருந்தோம்.

இந்த மூன்று மகஜர்களுக்கும் ஜனாதிபதி பதிலளிக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. வடக்கு கடற்தொழிலாளர் சமூகம் இலங்கை ஜனாதிபதிக்கு கீழா அல்லது இந்தியாவுக்கு கீழ் இருக்கிறோமா என ஜனாதிபதியை பார்த்து கேட்கின்றோம். ஜனநாயகம் ஜனநாயகம் என்று திரும்ப திரும்ப பேசிக்கொண்டிருக்கின்ற ஜனாதிபதி அவர்களே எங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தி ஆக்கபூர்வமாக ஒரு கடிதத்தை அனுப்பினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இத்தனை அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஏன் பதிலளிக்க அஞ்சுகிறீர்கள். ஏன் எங்களை வஞ்சிக்கிறீர்கள்?

நாங்கள் உங்கள் நாட்டு மக்களில்லையா? அப்படியாயின் வடக்கு மக்கள் வேறு நாட்டுக்கு தான் சொந்தமா? அப்படியாயின் அதனை தெளிவாக கூறுங்கள்.
கடிததங்களுக்கு பதிலளிக்க முடியாது, எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க முடியாது. நாங்கள் என்ன ஒடுக்கப்பட்ட மக்களா? போராடினால் வன்முறை என்கிறீர்கள். போராடினால் ஒடுக்க நினைக்கின்றீர்கள். நியாயமாக கடிதம் அனுப்பினால் பதிலில்லை. இது தானா இலங்கையினுடைய ஜனநாயகம்?

சர்வதேச நாடுகளே நாங்கள் வடக்கு கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுகிறோம். எங்களின் வளங்களும் வாழ்வாதாரங்களும் அரசாங்கத்தினால் அழிக்கப்படுகின்றது. எங்கள், சங்கங்கள் சமாசங்கள் ஊடாக தான் கடிதங்களை அனுப்புகிறோம். ஆனால், இந்த ஜனநாயக நாட்டிலே எங்களுக்கு முக்கியமில்லையா? ஜனாதிபதி அலுவலகம் ஏன் இயங்குகின்றது?

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் கொழும்பில் இருந்து கொண்டு அதிகாரிகளோ அமைச்சர்மாரோ சொல்கின்ற செய்திகளை நீங்கள் கேட்டுக் கொண்டு எங்களை வஞ்சிக்காதீர்கள். நாங்களும் இலங்கையினுடைய குடிமக்கள். எங்களுடைய தொழில்சார், வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறே உங்களை கேட்கின்றோம். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி செய்து வளப்படுத்துகிறது என்று கூறும் ஜனாதிபதியும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரத் தேவையில்லை. வடக்கை பொறுத்தவரையில் கடற்தொழிலாளர்களாகிய எங்களுக்கு இருக்கின்ற கடல் வளத்தையும் வாழ்வாதாரத்தையும் நாங்கள் சுயமாக சுதந்திரமாக தொழில் செவதனை உறுதிப்படுத்துங்கள்.

எங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனும் வேண்டாம். உலக நாடுகளின் பிச்சையும் வேண்டாம். எங்களின் வளத்தை நாங்கள் அனுபவித்து வாழ 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களுக்கு வழி செய்து தர வேண்டும். இல்லையென்றால் எங்களை நசுக்குங்கள். எதிர்காலத்தில் மாற்று திட்டங்களை நோக்கி வடக்கு கடற்தொழில் சமூகம் நகரும் என்பதை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துகிறோம். 50000 மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இரண்டு இலட்சம் மக்கள் சார்பாக நாங்கள் கேட்கின்றோம்.

இறுதியாக வடக்கில் உள்ள 18 சங்கங்கள், சமாசங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஜனாதிபதியோடு நேரில் சந்தித்து கதைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். என்பதனை அறுதியும் இறுதியுமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.