அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை நீடிக்க காங்கிரஸ் அனுமதி !!
அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை நீடிப்பதற்கு காங்கிரஸ் அனுமதி வழங்கியுள்ளது.
பிரதிநிதிகள் சபை குறித்த செயற்பாட்டிற்கு அனுமதி வழங்கிய ஒரு நாளுக்கு பின்னர் காங்கிரஸின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்திக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில், குறித்த திட்டத்திற்கு குடியரசு கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை நேற்று(01) அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், பிரேரணைக்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை சட்டமாக இயற்றுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில், அவர் கையொப்பமிட்டவுடன், 31.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் கடனில் இருந்து அமெரிக்காவை பேரழிவு தரும் நிலையிலிருந்து காப்பாற்ற முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி அமெரிக்கா அதன் தற்போதைய கடன் உச்சவரம்பை மீறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர நடவடிக்கையாக இந்த செயற்பாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளது.