102 மருத்துவ கல்லூரிகளுக்கு நோட்டீஸ்- தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை!!
நாடுமுழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஆய்வு, சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் 38 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது. இதில் தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகளும் அடங்கும். சி.சி.டி.வி. கேமரா பொருத்தாதது, ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை இல்லாதது, போதுமான பேராசிரியர்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் இக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 38 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு பிறகு நாடு முழுவதும் 102 மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை பதிவை செயல்படுத்த தவறியதற்காக இக்கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கட்டாய பயோமெட்ரிக் வருகைக்கான விதிமுறைகளை இந்த கல்லூரிகள் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:- தேசிய மருத்துவ ஆணையம் நடத்திய ஆய்வில் கல்லூரிகளின் பெரும்பாலான ஆசிரிய உறுப்பினர்கள், டீன், முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்கள் கூட பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகையை குறிப்பிடவில்லை. மருத்துவ கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் ஆப் செய்யப்பட்டு அல்லது இணைக்கப்படாமல் இருந்தன.
390-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் பெற உள்ளன. அதில் 256 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. அதிகாரிகள் 175 விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்து 25 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 38 விண்ணப்பங்கள் ஏற்கப் படவில்லை. 102 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 10 மருத்துவ கல்லூரிகளின் விண்ணப்பங்கள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.