கொன்று குவிக்கப்பட்ட உக்ரைன் துருப்புகள்.! தாக்குதல்களுக்கு பதிலடி!!
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலும் அதேபோல ரஷ்ய எல்லைக் கிராமம் மீதான பீரங்கித் தாக்குதல்களும் தீவிரமாக இடம்பெற்று வருவதால் இரண்டு தரப்புக்களிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைனிய தலைநகர் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 9 வயது சிறுமி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்ட நிலையில், ரஷ்ய எல்லை நகர் மீது நடத்தபட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
எல்லைப்பகுதியில் நேற்று இடம்பெற்ற பாரிய மோதலின் போது 50 உக்ரைனிய போர் வீரர்கள் பலியானதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, உக்ரைனின் நான்கு பெரிய போர் வாகனங்களும், ஒரு ரொக்கட் லோஞ்சர் ஒன்றும், ஒரு பிக்கப் ரக வாகனமும் தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக தற்போது அதன் எல்லை நகரான பெல்கோரோட் ஐ உக்ரைனிய பீரங்கிகளும் ஆளில்லா வான்கலங்களும் குறிவைத்து வருகின்றன.
ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கும் தமது இராணுவத்துக்கும் தொடர்பு இல்லையெனவும் இந்தத் தாக்குதல்கள் ரஷ்யாவின் தற்போதைய அரசாங்கத்துக்குரிய எதிர்ப்பு குழுக்களால் நடத்தப்பட்டு வருவதாகவும் உக்ரைன் குறிப்பிடுகிறது.
எனினும் இவ்வாறான எல்லைத் தாக்குதல்கள் உக்ரைன் மீதான தமது சிறப்பு இராணுவ நடவடிக்கையின் போக்கை ஒருபோதும் மாற்றாதென ரஷ்ய அதிபர் விளடிமிர் புடினின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ரஷ்ய எல்லை நகர் மீது நடத்தபட்ட எறிகணைத் தாக்குதலில் வாகனம் ஒன்றில் சென்ற இரண்டு பெண்கள் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்ய அரசாங்கத்தை எதிர்க்கும் ரஷ்ய ஆயுத குழுக்களில் ஒன்று இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
எனினும் இந்தக் குழு உக்ரைனிய இராணுவ குழுவெனவே ரஷ்யா கருதுவதால் மோதல் நிலைமைகள் தீவிரமடைந்துள்ளன.