குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள்: சிகிச்சை பெற்றவர்களை சந்தித்தபின் மோடி தகவல்!!
ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, நிவாரணம் அறிவித்தார். ஒடிசா அரசுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என அறிவித்தார். இன்று காலை உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதன்பின் டெல்லியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு விமானம் மூலம் விரைந்தார். அங்கிருந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார். அங்கு விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அதன்பின் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறியதாவது:- ரெயில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இது ஒரு வலியை ஏற்படுத்தக் கூடிய சம்பவம். உயிரிழந்தவர்களை அரசு மீண்டும் கொண்டு வர முடியாது. ஆனால், அவர்கள் குடும்பத்தினரின் துக்கத்துடன் இருக்கும். இந்த விபத்து அரசுக்கு மிகவும் சீரியஸ் ஆனது. காயம் அடைந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களை அரசு கை விட்டுவிடாது. ஒவ்வொரு வகையிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் தப்பிடவிட முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.