ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!!
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் 261 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோர விபத்து எப்படி நடந்தது? மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை, மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரண விவரங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர். ரெயில் விபத்து குறித்து பெண் அதிகாரி ஒருவர் மோடியிடம் விளக்கினார். இந்த நிலையில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார். விபத்து நடந்த பஹானாகா பஜார் ரெயில் நிலைய பகுதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் ரெயில்வே அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து கட்டாக் மருத்துவமனைக்கு செல்லும் பிரதமர் அங்கு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.