அமெரிக்கா | பிறந்த 3 நாட்களில் நகர்ந்த குழந்தை!!
பிறந்து 3 நாட்களிலே குழந்தை ஒன்று தலையை தூக்கிய நிலையில் நகர்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.
பெனிசில்வேனியா சேர்ந்தவர் சமந்தா எலிசபெத். இவருக்கு பிப்ரவரி மாதம் நைலா என்ற குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை பிறந்த மூன்று நாட்களில் குப்புறப் படுத்து தலையை தூக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத சமந்தா தனது போனில் அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகியது.
இதுகுறித்து சமந்தா கூறும்போது, “முதல் தடவை அவள் தனது இடத்திலிருந்து நகர்வதை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். என் வாழ்க்கையில், பிறந்த குழந்தை ஒன்று இவ்வளவு விரைவாக நகர்ந்ததை நான் பார்த்ததில்லை. என் குழந்தை நகர்ந்தபோது அருகில் எனது அம்மா மட்டுமே இருந்தார். நான் இந்த வீடியோவை எடுக்காமல் இருந்திருந்தால் என் கணவர் உட்பட யாரும் இதனை நம்பி இருக்க மாட்டார்கள்” என்றார்.
குழந்தைகள் பெரும்பாலும் 8 -9 மாதங்களில் தான் நகரும். இந்த நிலையில் மூன்று நாட்களில் நைலா நகர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.