சிங்கப்பூரில் நடந்த ‘ஸ்குவிட் கேம்’ பாணி விளையாட்டில் ரூ.11 லட்சம் வென்ற தமிழர்!!
தென்கொரியாவின் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸை பிரதியெடுத்து சிங்கப்பூரில் நடத்தப்பட்ட விளையாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.11 லட்சத்தை வென்றுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் செல்வம் ஆறுமுகம். 42 வயதான இவர் கடந்த 2007-ம் ஆண்டு பணிநிமித்தமாக சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் பொலிசம் இன்ஜினியரிங் (Pollisum Engineering) என்ற நிறுவனத்தில் சிக்னல் மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவரது நிறுவனம் சார்பில் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸை தழுவிய விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
‘ஸ்குவிட் கேம்’ என்பது தென்கொரிய வெப் சீரிஸ். கடந்த 2021-ம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த வெப் சீரிஸ் பல்வேறு விளையாட்டுகளை அடிப்படையாக கொண்டது. வென்றால் வெகுமதியும், தோற்றால் கொல்லப்படும் அபாயமும் கொண்ட இந்த வெப் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது. ஆனால், சிங்கப்பூரில் நடந்த விளையாட்டில் அதுபோல் அதிர்ச்சி முடிவு எல்லாம் இல்லை. எனினும், அதில் இடம்பெற்ற விளையாட்டுகள் இருந்தன. இந்த வெப் சீரிஸ் குறித்தோ, அந்த விளையாட்டுகள் குறித்தோ அறியாத செல்வம் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸில் வருவது போல ஜாக்கெட்டுகளும், ட்ராக் சூட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அதன் பாதுகாவலர்களும் சிகப்பு கலர் ஜம்ஷூட்களை அணிருந்தது மட்டுமல்லாமல் பணம் அடங்கிய உண்டியல் ஒன்றையும் காட்சிக்கு வைத்துள்ளனர். விளையாட்டின் விதிமுறைகளை அறியாத ஆறுமுகம் தனக்கு முன்னால் இருப்பவர்கள் செய்வதைக் கண்டு அறிந்து அதன் மூலம் விளையாடியுள்ளார். இதில் வெற்றிபெற்ற அவர், ‘என்னால் இதை நம்பமுடியவில்லை” என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த ரூ.11 லட்சம் என்பது ஆறுமுகத்தின் ஒன்றரை ஆண்டுகால வருமானம்.
இந்த வெற்றிகுறித்து பேசிய அவர், “இந்தப் பணத்தை வைத்து இந்தியாவில் எனது குடும்பத்திற்காக வீடு ஒன்றை கட்டுவேன். என் குடும்பத்தில் மொத்தம் 15 பேர். அவர்கள் வாடகை வீட்டில் தான் தங்கியிருக்கிறார்கள். அண்ணன் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு பணத்தை பயன்படுத்துவேன். இந்த நம்பமுடியாத விஷயத்தை என் வீட்டில் சொன்னதும் நான் ஏதோ ஜோக் சொல்கிறேன் என நினைத்தார் என் மனைவி. பின்னர், என் நண்பர் சொல்லியதும் தான் நம்பினார். இதைக் கேட்ட என் குடும்பத்தினர் அழுதுவிட்டனர். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்” என்று தெரிவித்துள்ளார்.