‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடிய உக்ரைன் ராணுவ வீரர்கள்!!
டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனதோடு, ஆஸ்கார் விருதையும் வென்றது. படம் வெளியான போதே இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ராம்சரண்-ஜுனியர் என்.டி.ஆர். போல ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவ வீரர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ‘நாட்டு நாட்டு’ பாடல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு சில நாட்களில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், போருக்கு மத்தியில் உக்ரைன் வீரர்களின் நடனத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ 6 லட்சம் பார்வைகளையும், 6 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது.