ஒடிசா ரயில் விபத்து: கனடா, தைவான், நேபாளம் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கனடா, தைவான், நேபாளம், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இத்தாலி மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து குறித்து செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். கடினமான இத்தருணத்தில் இந்திய மக்களுடன் துணை நிற்பதாக கனடா பிரதமர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தைவான் அதிபர் சாய் இங்-வென் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிராத்தனை செய்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் ஏராளமான உயிர்கள் பாலியாகியிருப்பது வருத்தமளிக்கிறது. இந்த நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என நேபாள பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தெரிவித்துள்ளார்.
மோசமான ரயில் விபத்திற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் ரயில் விபத்து தனக்கு கவலை அளிக்கிறது என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உயிர் இழந்தவர்கள் குடும்பங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்காக பிராத்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் விரிவாக மீள்வார்கள் என நம்புகிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா உடன் இலங்கை துணை நிற்கும் என்று அவர் தெரிவித்தார்.