லிபியா போராளிகள் சிறைப்பிடித்த 9 இந்திய மாலுமிகள் விடுவிப்பு!!
கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான எம்.டி.மாயா-1 என்ற வணிக கப்பல் ஒன்று பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு மால்டாவில் இருந்து லிபியா நாட்டு தலைநகர் திரிபோலிக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்றது. கப்பலில் இந்தியாவை சேர்ந்த 9 மாலுமிகள் உள்பட பலர் இருந்தனர். அந்த கப்பல், லிபியாவின் கடற்கரைக்கு அருகே வந்த போது நடுக்கடலில் பழுதடைந்தது. அப்போது கப்பலில் இருந்தவர்களை லிபியா உள்ளூர் போராளிகள் சிறைபிடித்தனர். இந்திய மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டது. வெளிவிவகார அமைச்சகமும், இந்திய தூதரகமும் லிபியாவில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்திய மாலுமிகளை மீட்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் லிபியா கிளர்ச்சி குழுவால் சிறைபிடிக்கப்பட்ட 9 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் லிபியா தலைநகர் திரிபோலிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களை துணிசியாவுக்கான இந்திய தூதர் வரவேற்றார். மீட்கப்பட்ட 9 பேரும் விசா நடைமுறைகள் முடியும் வரை திரிபோலியில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாலுமிகளில் 5 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் ராஜஸ்தான், மேற்கு வங்காளம், இமாச்சல பிரதேசம், குஜராத்தை சேர்ந்த தலா ஒருவர் ஆவர்.