சீரமைப்பு பணிகள் நிறைவு – 51 மணி நேரத்திற்கு ரெயில் சேவை தொடக்கம்!!
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா ரெயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன.
தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது. தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து நடந்து 51 மணி நேரம் ஆனநிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கியது. சீரமைக்கப்பட்ட பாதையில் சென்ற சரக்கு ரெயிலை, அங்கிருந்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார்.