ஒடிசா ரெயில் விபத்து: பலி எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி சந்தேகம்!!
ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் பலியானதாகவும், 1,175 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் இறந்ததாக ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளதை நம்ப முடியவில்லை. மேற்கு வங்காளம் என்ற ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்களிலேயே 61 பேர் இறந்திருப்பதாகவும், 182 பேரை காணவில்லை என்றும் கூறும்போது, 275 பேர் பலி என்பதை எப்படி ஏற்பது? இந்த எண்ணிக்கை எப்படி நிற்கும்? நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ‘துரந்தோ’ எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்னுரிமை அளிப்பதை நிறுத்திவிட்டனர்.
‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில்களின் என்ஜின் மட்டும் தரமாக இருக்கிறதா? ‘வந்தே பாரத்’ என்ற பெயர் நன்றாக இருக்கிறது. ஆனால், மரக்கிளை முறிந்து விழுந்தபோது அந்த ரெயிலுக்கு என்ன ஆனது? நான், நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் ரெயில்வே மந்திரிகளாக இருந்தபோது, விபத்துகளில் ஏராளமானோர் பலியானதாக இப்போது சொல்கிறார்கள். அதனால், இந்த துயரமான நேரத்திலும் நான் இதை சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். புதிய சிக்னல் சாதனமும், ரெயில்கள் மோதலை தடுக்கும் சாதனமும் நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோதுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.