திருப்பதி ரெயிலில் திடீர் தீ!!
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பதிக்கு நேற்று இரவு புறப்பட்டு வந்தது. பிரகாசம் மாவட்டம் டங்கடூர் அருகே வந்தபோது திடீரென ரெயிலில் புகை கிளம்பியது. அடிப்பகுதியில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் கீழே இறங்கி தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் அதற்குள் தகவல் அறிந்து குறிப்பிட்ட பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் அந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் தப்பினர். உராய்வு காரணமாக சக்கரத்திலிருந்து தீ வந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பிறகு அந்த ரெயிலில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு மீண்டும் திருப்பதிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.