திருப்பதி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்- ஒரு மணி நேரத்தில் மீட்பு!!
ஆந்திர மாநிலம் திருப்பதி கொத்த குண்டா, புளிச்சேர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவரது மனைவி ரெட்டியம்மா. திருப்பதி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். குழந்தை பிறந்து 5 நாட்கள் ஆனதால் நேற்று காலை ரெட்டியம்மாவை டாக்டர்கள் வீட்டிற்கு அனுப்ப இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த 2 பேர் ரெட்டியம்மா அருகே தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை கடத்தி சென்றனர். ரெட்டியம்மா அருகே தூங்கிக்கொண்டு இருந்த குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரெட்டியம்மா ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
அவர்கள் உடனடியாக திருப்பதி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையை கடத்தி சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திருப்பதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணித்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் ஒரு ஆணுடன் குழந்தையை கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணையும், அவரது கணவரையும் அலிப்பிரி ரோட்டில் உள்ள விவேகானந்தா சர்க்கிளில் மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரும் இது தன்னுடைய குழந்தை தான் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குழந்தையை பறிகொடுத்த ரெட்டியம்மாவை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து காண்பித்தபோது அது அவருடைய குழந்தை என தெரியவந்தது.
அதனை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பதி அருகே உள்ள நாகலாபுரம் கிழக்கு அர்ஜுனவாடாவை சேர்ந்த லதா (வயது 24), அவரது கணவர் வெட்டி சுமன் என தெரியவந்தது. லதா கர்ப்பமாக இருந்து கரு கலைந்து விட்டதால் இனி குழந்தை பிறக்காது என்ற எண்ணத்தில் குழந்தையை கடத்திச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் கணவன், மனைவி இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.