இன்னும் 101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை!!
ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பலரது உடல்கள் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை வரை இன்னும் 101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று கிழக்கு மத்திய ரெயில்வே பிரிவு மானேஜர் ரிங்கேஷ் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் காயம் அடைந்தவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரங்கள் குறித்து அவர் கூறியிருப்பதாவது:- ஒடிசா ரெயில் விபத்தில் சுமார் 1100 பேர் காயம் அடைந்தனர். அதில் 900 பேர் முதல் உதவி உள்ளிட்ட லேசான சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இன்னும் 200 பயணிகள் பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 278 பேர் உயிரிழந்துள்ளனர். 101 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இவ்வாறு தெரிவித்தார். புவனேஸ்வர் நகராட்சியின் கமிஷனர் விஜய் அம்ரித் குலாங்கே கூறியதாவது:- 193 உடல்கள் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதில் 80 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 55 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் உதவி எண் 1929-க்கு வந்துள்ளன. உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.