;
Athirady Tamil News

குண்டு வீசி அணை தகர்ப்பு.. ஆற்றில் கலந்த 150 டன் என்ஜின் ஆயில்: உக்ரைன் எச்சரிக்கை!!

0

உக்ரைன்-ரஷியா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ட்ரோன் மூலம் நடத்தப்படும் வெடிகுண்டு தாக்குதல்களில் பெரும் பொருட்சேதம் ஏற்படுகிறது. அவ்வகையில், உக்ரைனின் முக்கியமான நதியான டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா அணை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்படுகின்றனர். இதற்கிடையே, ககோவ்கா அணையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக 150 டன் என்ஜின் ஆயில் டினிப்ரோ ஆற்றில் கலந்து விட்டதாகவும், இதனால் சுற்றுச் சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் உக்ரைன் எச்சரித்துள்ளது.

உக்ரைன் அதிபர் அலுவலக அதிகாரி டரியா ஜரிவ்னா இது பற்றி கூறுகையில், 150 டன் என்ஜின் ஆயில், குண்டு வெடிப்பின் காரணமாக டினிப்ரோ நதியில் பாய்ந்து கலந்து விட்டது என்றார். மேலும் 300 டன் எண்ணெய் ஆற்றில் கலக்கும் அபாயம் இருப்பதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ககோவ்கா நீர்த்தேக்கம் சுமார் 18 கன கிலோமீட்டர் நீரை தேக்கும் கொள்ளளவு வாய்ந்தது. இது அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள பெரிய உப்பு ஏரிக்கு நிகரானது. இந்த எண்ணெய் ஆற்றில் கலப்பதின் விளைவாக இப்பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீண்டகால மற்றும் மாற்ற முடியாத சேதாரத்தை ஏற்படுத்தி விடும் என உக்ரைனின் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் நீரின் அளவால் நோவா காகோவ்கா மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்கள் ஏற்கனெவே இறந்து விட்டதாகவும் அவர் கூறினார். தெற்கு உக்ரைனின் வனவிலங்குகளுக்கு ஏற்படப்போகும் கேடுகளின் தொடக்கம் இது எனவும் அவர் குறிப்பிட்டார். உக்ரைனில் மட்டுமல்லாமல் பிராந்திய அளவில் ஒரு விதமான சுற்றுச் சூழல் அழிவை நாம் காணத்தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.