ரஷியாவுக்கு திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. நிலைமையை கண்காணிக்கும் அமெரிக்கா!!
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர். இந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது ஒரு என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த விமானி, விமானத்தை அருகில் உள்ள ரஷியாவுக்கு திருப்பினார். ரஷியாவின் மகாதன் விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தின் என்ஜின் பழுது குறித்து தகவல் தெரிவித்து அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்கா நோக்கி வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமெரிக்கா வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிவோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும், அந்த விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியவில்லை. பயணிகள் தங்கள் பாதையில் செல்ல வேண்டிய இடத்திற்கு மாற்று விமானத்தை அனுப்ப உள்ளனர்” என்றார்.