உலகமே வியக்கும் இந்தியாவின் இராஜதந்திரம் !!
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது உலகமே வியக்கும் இராஜதந்திர நகர்வாக மாறியிருக்கிறது.
சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, எரிபொருள் உட்பட பல பொருட்களை பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ஈராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் முதன்மையான இடத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது, ரஷ்யா அந்நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது.
இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது.
அதுவரையில், ரஷ்யாவிடமிருந்து 2% அளவிலேயே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவந்த இந்தியா, ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.
இந்நிலையில் தற்போது ஈராக், சவூதி அரேபியாவை விட ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது இந்தியா.
தற்போது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு 45 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மே மாதத்தில் நாளொன்றுக்கு 19 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இது ஏப்ரல் மாதத்தை விட 15 சதவீதம் அதிகம் ஆகும். அதே சமயம், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC, இந்தியாவின் இறக்குமதியில் 39 சதவீதமாக சரிந்துள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீத பங்களிப்பை OPEC வழங்கி வந்தது. உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யா சலுகை விலையில் சச்சா எண்ணெய் வழங்க துவங்கியதே OPEC இன் வணிக இழப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இது தவிர, மே மாதத்தில் நாளொன்றுக்கு 8 லட்சத்து 30 ஆயிரம் பீப்பாய்கள் எண்ணெய் ஈராக்கில் இருந்தும் 2 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும் 1லட்சத்து 38 ஆயிரம் பீப்பாய்கள் அமெரிக்காவில் இருந்தும் இறக்குமதி செய்தது இந்தியா.
அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று அதன் நட்பு நாடுகள் பல, ரஷ்யாவிடம் வர்த்தக தொடர்பை முறித்துக்கொண்ட நிலையில் அமெரிக்காவிடம் மிகுந்த நட்பு பாராட்டி வரும் இந்தியாவோ ரஷ்யாவிடமும் பல ஆண்டுகளாக நட்புறவை தொடர்ந்து வருகிறது.
இந்தச் சூழலில் அமெரிக்காவின் கருத்தை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிலையில் தான் உக்ரைன் உடனான போர் சூழலிலும் இந்தியாவுடனான பல ஆண்டு வர்த்தக தொடர்பை வலுவாகப் பிடித்துக் கொள்வதில் கவனம் கொண்டுள்ள ரஷ்யா அதில் வெற்றியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.