மறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே !! (மருத்துவம்)
இங்கிலாந்தில், ‘ஏஜ் கன்சேர்ன்’ என்ற அமைப்பொன்று உள்ளது. முதியவர்களுக்கான சேவை அமைப்பான இதில், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கான பராமரிப்பு நிலையமே இதுவாகும்.
‘வயதானால் மறதி வந்துவிடும்’ என்று முதியவர்களை இவர்கள் ஒதுக்கி வைப்பதில்லை. மூளையில் உள்ள நரம்புச் செல்கள் அழிவதால் ஏற்படும் மனநலக் குறைபாடு என்பது, புரிந்து, அவர்களுக்கென்று இருக்கும் பிரத்தியேக மய்யங்களில் பராமரிக்கின்றனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட இந்தியப் பாட்டியொருவர் இருக்கிறார். அந்தப் பாட்டியின் தமிழ்ப் புலமை, எவரையும் பிரமிக்க வைக்கும். இலக்கியத்தில் எந்தப் பகுதியைக் கேட்டாலும், புத்தகத்தைப் பார்க்காமல், அருவிபோல தடையில்லாமல் சொல்லுவார். மொழி மீது அவருக்கிருந்த ஆளுமை, மறதி நோய் வந்தபின் குறைந்தது. குழந்தையைப் போல விழித்தார். இதை ஏற்றுக்கொள்ளவே, அவரது உறவினர்களுக்குக் கஷ்டமாக இருந்தது.
பகல் நேரத்தில், வேலை, கல்லூரி, பள்ளி என்று வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் சென்றுவிடுவதால், பாட்டியைப் போல பாதிக்கப்பட்ட முதியவர்களைக் கவனித்துக் கொள்வது சிரமம்.
நோய் பாதித்தவருக்கு எதுவுமே தெரியாது. இவர்களைப் பராமரிக்கும் குடும்பத்தினருக்கு, பல விதங்களிலும் அதீத மன அழுத்தம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்புச் செல்களின் செயற்பாடு மெதுவாக அழிவதால் ஏற்படும் பிரச்சினை இது என்பதால், அவர்களால் எதையும் நினைவில் வைக்க முடியாது.
எல்லா நேரமும் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால், பிரச்சினையின் தாக்கம் மிக மெதுவாக இருக்கும். தனிமையை உணரவிடாமல், பேசுவது, எழுதுவது என்று சுறுசுறுப்பாக இவர்களை வைத்திருக்கலாம்.
பேசுவதையே திரும்ப திரும்ப பேசுவது, எதிர்பாராமல் மாறும் மனநிலை, கோபம், பழைய நினைவுகள் நினைவில் இருப்பது, நிகழ்காலச் சம்பவங்களை மறந்துவிடுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று, பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், பிரச்சினை தீவிரமாகாமல் கட்டுப்படுத்துவது எளிது. அறுபது வயதுக்கு மேல், மூளைக்கு முறையான பயிற்சிகள் கொடுத்தால், மறதி நோய் வராமலேயே தடுக்கலாம்.