6 மாதங்கள் தாயை அடைத்து வைத்தவர் கைது !!
மூன்று பிள்ளைகளின் தாயான 29 வயதான பெண்ணைக் கடத்தி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் வர்த்தகர் ஒருவர், மாத்தறை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பணியகத்தினரால் கம்புருபிட்டியவிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 06 மாதங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண், வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தன்னிடமிருந்து தப்பிக்க முயற்சித்தால் தனது பிள்ளைகளையும் கணவரையும் கொலை செய்வதாகவும் மேலும் தன்னை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து அதை இணையத்தளங்களில் வெளியிடுவதாகவும் கூறி குறித்த சந்தேக நபர் மிரட்டியதாகவும் குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனது மகளைக் காப்பாற்றுமாறு பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த போதிலும் பலன் கிடைக்கவில்லை எனவும், அதனால் தென் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்களுக்கு தான் முறைப்பாடு அளித்ததாகவும் விசாரணையை அவர் மாத்தறை பெண்கள் மற்றும் சிறுவர் பணியக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருணி கேஷல போகஹவத்தவிடம் கையளித்ததாகவும் குறித்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.
குறித்த வீட்டை சோதனைக்குட்படுத்திய போது, சந்தேக நபரின் மீன் கடைகளில் பயன்படுத்திய ஐந்து பெரிய கத்திகள், கடத்தப்பட்ட பெண்ணின் நிர்வாண வீடியோக்கள் அடங்கிய கைபேசி மற்றும் மெமரி கார்ட் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கைபேசியில் சிறுமி ஒருவர் குறித்த சந்தேக நபரால் கற்பழிக்கப்படும் வீடியோ இருந்ததாகவும், கொலை, ஒரு பெண்ணைக் பாலியல் பலாத்காரம் செய்தமை மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கியது போன்ற சந்தேக நபருக்கு எதிரான பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான ஆதாரங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்த பெண்ணின் மாமனார் என்பதும், அதனால் எம்பிலிப்பிட்டியவிலுள்ள பெண்ணின் வீட்டிலிருந்தே அவரைக் கடத்தியுள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் நேற்று மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தென் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாத்தறை பெண்கள் மற்றும் சிறுவர் பணியக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருணி கேஷல போகஹவத்தவின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று முன்னெடுத்து வருகின்றது.